
கூச்சிங், ஜூலை-19- சடலங்களை நிர்வகிப்பதில் இடைத்தரகர்களாக செயல்பட வேண்டாமென, சரவாக் சுகாதாரத் துறை தனது பணியாளர்களை கடுமையாக எச்சரித்துள்ளது.
அம்மாநில மருத்துவமனையொன்றில் சடலங்களைக் ‘கைப்பற்ற’ குண்டர்கள் போட்டாப் போட்டியில் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்கள் அம்பலப்படுத்தியதை அடுத்து, இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கையை மீறுவோர் மீது 1993-ஆண்டு பொதுச் சேவை ஊழியர்களின் நன்னடத்தை மற்றும் கட்டொழுங்கு விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
சரவாக் சுகாதாரத் துறையின் இயக்குநர் Dr வெரோனிகா லூகா (Veronica Lugah) அதனைத் தெரிவித்தார்.
ஊழலை உட்படுத்திய எந்தவோர் அதிகார துஷ்பிரயோகத்தையும் தமது தரப்பு சகித்துக் கொள்ளாது என்றார் அவர்.
அதே சமயம், மருத்துவமனைகளில் சடலங்களை நிர்வகிக்கும் பொறுப்பும் உரிமையும் முழுக்க முழுக்க வாரிசுத்தாரர் மற்றும் குடும்பங்களுக்கு மட்டுமே உண்டு என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
சடலங்களை நிர்வகிக்கும் குண்டர் கும்பல்களுக்கு இடையில், சரவாக்கிலுள்ள அரசாங்க மருத்துவமனையொன்றின் பிணவறையில் போட்டாப் போட்டி நடப்பதாகவும், அடிக்கடி அவர்கள் சண்டையிட்டுக் கொள்வதாகவும் FMT முன்னதாக அம்பலப்படுத்தியது.
இறப்பு அறிவிக்கப்பட்ட உடனேயே அல்லது சில சமயங்களில் முன் கூட்டியே அங்கு வந்து நின்றுகொண்டு, இறப்பு வீட்டாரை ‘வற்புறுத்தி’ தங்கள் சேவையைப் பெற வைப்பதை அக்கும்பல்கள் ஒரு வேலையாகவே கொண்டுள்ளன.
துக்கத்தில் இருப்பதால், இறுதிச் சடங்குகளைக் கவனிக்கும் பொறுப்புகளை, வேறு வழியின்றி அக்கும்பல்களிடமே குடும்பத்தார் ஒப்படைக்கின்றனர்.
குண்டர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு மருத்துவமனைப் பணியாளர்களும் அச்செயலுக்கு உடந்தையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.