Latestமலேசியா

’சட்டவிரோத’ கோயில் விவகாரம் குறித்து அமைச்சரவைக்கு விளக்கம் தருகிறார் சைஃபுடின்

’சட்டவிரோத’ கோயில் விவகாரம் குறித்து அமைச்சரவைக்கு விளக்கம் தருகிறார் சைஃபுடின்

கோலாலாம்பூர், பிப்ரவரி-12,

உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில், சட்டவிரோத கோயில் விவகாரம் குறித்து நாளை அமைச்சரவைக்கு விளக்கம் அளிக்கிறார்.

சிலாங்கூர் ரவாங்கில் சில தனிநபர்கள் சேர்ந்து உச்சிமலை முனீஸ்வரர் ஆலயத்தை இடித்துள்ள சம்பவம் உட்பட, அனுமதி இல்லாத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்களும் இந்த விளக்கமளிப்பில் இடம்பெறும்.

அவ்விவகாரத்தை போலீஸார் கையாளும் விதம், குறிப்பிட்ட சிலர் தங்களின் சுயநலன்களுக்காக நடுவில் புகுந்து இனமோதல்களை உருவாக்குவது உட்பட உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து, அமைச்சரவையிடம் விளக்கப் போவதாக சைஃபுடின் சொன்னார்.

கடந்த வாரம் SOGO பேரங்காடி வளாகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த பேரணியைத் தடைச் செய்தது, அதன் ஏற்பாட்டாளர்களைக் கைதுச் செய்தது ஆகியவற்றைக் கூட, சிலர் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகப் பார்க்கின்றனர்.

இந்நிலையில், போலீஸ் எடுத்த நடவடிக்கைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படாமல் அல்லது ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பார்க்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்வதும் நாளைய விளக்கமளிப்பின் நோக்கம் என்றார் அவர்.

இதற்காக, தேசியப் போலீஸ் தலைவர் மற்றும் சிறப்பு பிரிவினர் முழு அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.

இந்நடவடிக்கை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்திய “சட்ட அமுலாக்கம் அவசியம், ஆனால் சொந்த கைகளில் சட்டத்தை எடுத்துக் கொள்வதை ஏற்க முடியாது” என்ற நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!