
ஷா ஆலாம், பிப்ரவரி-3-மற்றவர் நிலத்தில் ‘சட்டவிரோதமாக’ கட்டப்பட்டதாக் கூறப்படும் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்கள் மோதல் வழியில் தீர்க்கப்படக்கூடாது.
மாறாக, நல்லிணக்கத்தோடும் விவேகமாகவும் அது கையாளப்பட வேண்டும் என, இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் கலாச்சார புத்தாக்கத் துறைகளுக்கான சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் Dr Muhammad Fahmi Ngah தெரிவித்தார்.
முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் அரசாங்க அல்லது தனியார் நிலங்களில் அமைக்கப்பட்ட விவகாரத்தில், சட்டங்கள் உடனடி நடவடிக்கைக்கு அனுமதித்தாலும், அந்தந்த பகுதியின் வரலாற்றுப் பின்னணி மற்றும் பல்லின சமூகத்தின் நிலைத்தன்மை கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.
“ஒருவேளை அண்மையில் தான் கட்டப்பட்டிருந்தால் அவர்களை நாம் உடனடியாக வெளியேறச் சொல்லலாம். ஆனால், அதுவே 50 ஆண்டுகளாக அந்த வழிபாட்டுத் தலம் செயல்பட்டு வந்தால், கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்கத்தின் படியே தீர்வு காண வேண்டும்” என Fahmi குறிப்பிட்டார்.
இஸ்லாம் ஒருபோதும் மோதல் அல்லது எதிர்மறை அணுகுமுறையை ஆதரிப்பதில்லை என்றும், நபிகள் நாயகத்தின் போதனைகள் நல்லொழுக்கம் மற்றும் நடத்தையின் மூலமே வெற்றி பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெட்டாலிங் ஜெயா, PJS 4 பகுதியில் உள்ள ஒரு கோயில் தொடர்பான சர்ச்சை குறித்து அவர் விளக்கம் அளித்தார்.
அந்த மாற்று இடம் பள்ளிவாசல் கட்ட ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் நில மேம்பாட்டாளர் அங்கு கோயில் கட்டி விட்டதாகவும் பிரச்னை போய்க் கொண்டிருக்கிறது.
ஆனால், அது உண்மையல்ல; காரணம் அந்த மாற்று இடம் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலமாக அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக Fahmi தெரிவித்தார்.
என்றபோதிலும், அந்நிலத்தை பெற கோயில் நிர்வாகம் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்றார் அவர்.
இத்தகைய அணுகுமுறை இஸ்லாமின் நிலையை பாதிக்காது; மாறாக, இஸ்லாம் நட்பானதும், நம்பிக்கையுடனும், பிற மதங்களுடன் பயமின்றி தொடர்பு கொள்ளத் தயாராக உள்ளதையும் காட்டுகிறது என்றார் அவர்.



