
கோலாலம்பூர், ஆகஸ்ட்-14 – முன்னாள் மத்திய அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியின் மகன் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் தீய நோக்கத்தைக் கொண்டது என பிரதமர் கண்டித்துள்ளார்.
பள்ளிகளில் பகடிவதை பிரச்னைகள் இன்னமும் தலைத்தூக்கியிருக்கும் நேரத்தில் இந்த நாசவேலை நடந்துள்ளது.
எனவே, அத்தாக்குதலை விரைவாகவும் வெளிப்படையாகவும் விசாரிக்குமாறு, உள்துறை அமைச்சை அன்வார் உத்தரவிட்டார்.
ரஃபிசியின் குடும்பம் இந்த இக்கட்டான சூழலை மனத்திடத்துடன் எதிர்கொள்வார்கள் என பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இவ்வேளையில் எதிர்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலும் இத்தாக்குதலை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற குற்றச்செயல்களுக்கு நாகரீக நாட்டில் இடமில்லை என, பெரிக்காத்தான் கொறடா டத்தோ ஸ்ரீ தக்கியுடின் ஹசான் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட விஷயங்களில் தொடர்ந்து உரக்கக் குரல் எழுப்புவதற்கு எதிரான எச்சரிக்கையாகவே அத்தாக்குதலைத் தாம் பார்ப்பதாக ரஃபிசி கூறியிருப்பதையும் தக்கியுடின் சுட்டிக் காட்டினார்.
ஒருவேளை அது உண்மையென்றால், ஆரோக்கியமற்ற குண்டர் கும்பல் அரசியல் கலாச்சாரத்தை அது பிரதிபலிக்கிறது.
அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒருபோதும் மிரட்டலாகவோ உடல் ரீதியான வன்முறையாகவோ மாறக்கூடாது.
அதிலும் குறிப்பாக குழந்தைகளை அது உட்படுத்தக் கூடாது என்றார் அவர்.
நேற்று பிற்பகலில் புத்ராஜெயாவில் உள்ள பேரங்காடியின் கார் நிறுத்துமிடத்தில், தன் தாயுடன் காரில் ஏற முயன்ற ரஃபிசியின் மகனை, மர்ம நபர் ஊசியால் குத்தினான்.
மோட்டார் சைக்கிளில் வந்தக் கூட்டாளியுடன் தப்பிச் சென்றவனை போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.
ரஃபிசியின் மகன் மருத்துவமனையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகக் தெரிகிறது.