
கோலாலம்பூர், ஜூலை 11 – சபாக் பெர்னம் , ஜாலான் பெசார் அருகே, தொழில்துறை ரசாயனத்தை ஏற்றிச் சென்ற லோரியும் , தேங்காய்களை ஏற்றிச் சென்ற மற்றொரு லோரியும் நேற்று மோதிக்கொண்டதை தொடர்ந்து அங்கு , ரசாயனக் கசிவு ஏற்பட்டது.
இரவு 7.01 மணிக்கு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் ரசாயன துடைத்தொழிப்பு குழு சம்பவம் நிகழந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.
இந்த மோதலின் விளைவாக ரசாயனங்களை கொண்ட டிரம்கள் கவிழ்ந்ததில் , 40 டிரம்களில் உள்ள 68 விழுக்காடு நைட்ரிக் அமிலம் மற்றும் 24 டிரம்களில் உள்ள 70 விழுக்காடு கால்சியம் ஹைபோகுளோரைட் கசிந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும மீட்புத்துறையின் நடவடிக்கைக்கான துணை இயக்குநர் அகமட் முக்லிஸ் மொக்தார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த லோரி ஓட்டுநர்களில் ஒருவரான 20 வயதுடைய நபர் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார், சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு நேற்று மாலை மணி 7.13 அளவில் வந்துச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சாலையில் கசிந்த ரசாயனங்களை தூய்மைப்படுத்தும் முயற்சியில் இன்று அதிகாலை மணி 2.42 வரை ஈடுபட்டனர்.