
புத்ராஜெயா, ஏப்ரல்-6-நாட்டின் அடிதட்டு நிலைகளில் ஏற்படும் முரண்பாடுகளைச் சமாளிக்கும் முயற்சியாக, சமூக மத்தியஸ்த சேவைகளை வலுப்படுத்த தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இம்முயற்சி அண்டை வீட்டாரிடையே பிரச்னைகளை சமரசமாக தீர்க்க உதவுவதுடன், அவை பெரிய அளவிலான மோதல்களாக அல்லது நீதிமன்ற வழக்குகளாக மாறுவதைத் தடுக்கும் என, அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் நம்பிக்கைத் தெரிவித்தார்.
தற்போது, பயிற்சிப் பெற்ற சமூக மத்தியஸ்தர்களின் எண்ணிக்கை 595-தாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இம்முயற்சியை வலுப்படுத்த 3 முக்கிய திட்டங்களை ஏரன் அறிவித்துள்ளார்.

சமூக மத்தியஸ்த வழிகாட்டி கையேடு வெளியீடு, தரமான சேவையை உறுதிச் செய்ய அங்கீகார முறை உருவாக்கம் மற்றும் மத்தியஸ்த மையங்களை 9-திலிருந்து 12-டாக அதிகரித்தல் ஆகியவை அவற்றிலடங்கும்.
இம்மையங்கள், மக்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளை பெற உதவும் தளங்களாக செயல்படும்.
இம்முயற்சி, சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் மடானி அரசாங்கத்தின் தொடர் கடப்பாட்டை வெளிப்படுத்துவதாக, ஒருமைப்பாட்டு அமைச்சின் மாதாந்திர சந்திப்புக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய போது ஏரன் கூறினார்.
துணையமைச்சர் ஆர். யுனேஸ்வரனும் அதில் கலந்துகொண்டார்.



