
இஸ்தான்புல், அக்டோபர் 16 – யேமனைச் (Yaman) சேர்ந்த ஹூத்தி கிளர்ச்சிக் குழுவினர் சவூதி அரேபியாவின் (Saudi Arabia) பல்வேறு விமான நிலையங்கள் மீது நடத்திய தாக்குதல்களில் 19 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 364 பேர் காயமடைந்துள்ளனர்.
சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணியின் செய்தித் தொடர்பாளர், கடந்த அக்டோபர் மாத தொடக்கத்திலிருந்து ஹூத்தி குழுவினரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, ரியாத் (Riyadh) நகரிலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் (King Khalid International Airport) மீது அக்டோபர் தொடக்கம் முதல் 20 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
அக்டோபர் 7 முதல் 11ஆம் தேதி வரை ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களில் 17 பேர் உயிரிழந்ததுடன், 333 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோல், அசீர் (Asir) மாநிலத்திலுள்ள அப்ஹா சர்வதேச விமான நிலையம் (Abha International Airport) மீதான தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், 28 பேர் காயமடைந்தனர். ஜசான் (Jazan) மாநிலத்திலுள்ள கிங் அப்துல்லா சர்வதேச விமான நிலையம் (King Abdullah International Airport) மீதான தாக்குதலில் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் ரியாத் விமான நிலையம் உட்பட சவூதி அரேபியாவின் ஐந்து விமான நிலையங்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல்களால் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டதுடன், சொத்துச் சேதங்களும் விமானப் போக்குவரத்துச் சேவைகளில் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.



