ஜோகூர் பாரு, நவம்பர்-28, சிங்கப்பூரில் கடத்தப்பட்டு, பஹாங் குவாந்தானுக்குக் கொண்டுச் செல்லப்பட்ட 15 வயது சிறுமியை, ஜோகூர் போலீஸ் பாதுகாப்பாக மீட்டுள்ளது.
மர்ம நபரால் மகள் கடத்தப்பட்டதாக சீன பிரஜையான 48 வயது தந்தை, முன்னதாக ஜோகூர் பாரு போலீசில் புகார் செய்திருந்தார்.
சிங்கப்பூரில் இடைநிலைப் பள்ளியில் படிக்கும் மகள் பள்ளிக்குச் செல்லாதது தெரிய வந்த போதே அவருக்கு சந்தேகம் வந்துள்ளது.
இதையடுத்து உடனடியாக துப்புத் துலங்கிய போலீஸ், 24 மணி நேரங்களில் குவாந்தானில் சிறுமி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தது.
அதே இடத்தில் 22 வயது சீனப் பிரஜை கைதுச் செய்யப்பட்டதாக ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் தெரிவித்தார்.
வூட்லண்ட்ஸ் நுழைவாயில் வழியாக செய்வாய்க் கிழமை சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் பாரு கொண்டு வரப்பட்ட அச்சிறுமி, 370 கிலோ மீட்டர் தூரம் தாண்டி 5 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு குவாந்தான் கொண்டுச் செல்லப்பட்டார்.
மீட்கப்பட்ட சிறுமி பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட வேளை, சந்தேக நபர் 7 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
கடத்தலுக்கானக் காரணம் குறித்து அவனிடம் தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது.
இந்நிலையில் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட தகவல் கொடுத்துதவிய பொதுமக்களுக்கு டத்தோ குமார் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.