
புத்ராஜெயா, அக்டோபர்-4, அக்டோபர் ஒன்றாம் தேதி அமுலுக்கு வந்த சட்டம் 852 எனப்படும் பொது சுகாதாரத்திற்கான புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் 2024-ங்கின் கீழ், 28 இடங்கள் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சலவைக் கடைகளும் (dobby) அவற்றில் அடங்குமென சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் ( Datuk Seri Dr Dzulkefly Ahmad) தெரிவித்தார்.
சலவைக் கடைகளும் புகைப் பிடிக்கத் தடை விதிக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டுமென, 2019-ஆம் ஆண்டில் தாம் முன்னெடுத்த போராட்டம் ஒருவழியாக நனவாகியிருப்பது குறித்து அமைச்சர் மகிழ்ச்சித் தெரிவித்தார்.
புகைப்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களின் பட்டியலில் வேலையிட கட்டடங்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள போதும், மக்கள் அதனுடன் தங்களைப் பழக்கிக் கொள்ள கால அவகாசம் வழங்கும் பொருட்டு, அமுலாக்க நடவடிக்கைகள் வரும் ஜனவரி ஒன்றாம் தேதிக்குப் பிறகே எடுக்கப்படும்.
அதுவரை, புகைப் பிடிக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதி என்ற எச்சரிக்கை அறிவிப்பை வைப்பதற்கு, வணிகத் தள உரிமையாளர்களுக்கும் போதுமான கால அவகாசம் வழங்கப்படுகிறது.
சட்டம் 852 குறித்து புத்ராஜெயாவில் ஊடகங்களுக்கு நடத்தப்பட்ட விளக்கமளிப்புக் கூட்டத்தின் போது, அமைச்சர் அவ்வாறு சொன்னார்.
அப்புதியச் சட்டம் புகையிலைப் பொருட்களின் பதிவு, விற்பனை, பொட்டலமிடல், குறியிடல், மற்றும் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை போன்ற விதிமுறைகளை உள்ளடக்கியிருக்கும்.
மின்னியல் சிகரெட்டும் (vape) அதன் கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.