புத்ராஜெயா, அக்டோபர்-1, சிறார்கள் மற்றும் பதின்ம வயதினரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு, விளையாட்டு சாமான்கள் வடிவிலான புகையிலைப் பொருட்களின் விற்பனைக்கு, இன்று அக்டோபர் முதல் தேதி தொடங்கி சுகாதார அமைச்சு (KKM) தடை விதித்துள்ளது.
கல்வி நிறுவனங்கள், விற்பனை மையங்கள், இணையம் வாயிலான விற்பனை, சுய சேவை இயந்திரங்கள் வாயிலான விற்பனை ஆகியவற்றை அத்தடை உள்ளடக்கியுள்ளது.
அதோடு, சிறார்கள் மற்றும் பதின்ம வயதினரைக்
குறி வைத்து மேற்கொள்ளப்படும்
அனைத்து வகைப் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களுக்கும், ஆதரவு நடவடிக்கைகளுக்கும் உடனடி தடை விதிக்கப்படுவதாக KKM கூறியது.
சட்டம் 852 என சுருக்கமாக அழைக்கப்படும் பொது சுகாதாரத்திற்கான புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் 2024, நாட்டில் இன்று முதல் நடைமுறைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
அப்புதியச் சட்டம் புகையிலைப் பொருட்களின் பதிவு, விற்பனை, பொட்டலமிடல், குறியிடல், மற்றும் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை போன்ற விதிமுறைகளை உள்ளடக்கியிருக்கும்.
மின்னியல் சிகரெட்டும் (vape) அதன் கீழ் வருகிறது.