Latestமலேசியா

பிறந்தது தை மாதம்: நாடு முழுவதும் களைக் கட்டிய பொங்கல் பண்டிகை

கோலாலம்பூர், ஜனவரி 14 – இன்று தை மாதம் பிறந்ததை முன்னிட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் மலேசியாவிலும், ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளுடன் காலை முதலே பொங்கல் பண்டிகைக் களைகட்டுவதை நம் காணும் மகிழ்வான தருணங்களாகும்.

குறிப்பாக தாய்க் கோயிலான ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட 3 முக்கியக் கோயில்களிலும் தைப்பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில், கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் கோயில், பத்துமலைத் திருத்தலத்தில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் ஆகிய மூன்று கோயில்களிலும் காலை 9.30 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டதாக ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவரும் அரங்காவலருமான டான் ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.

இவ்வேளையில், இவ்வருடம் கோர்ட்டுமலை, ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடத்தப்படுவது குறித்தும் டான் ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.

இதனிடையே, கோயில்களில் கரும்புகளுடன் அலங்கரிக்கப்பட்ட வாயில்களும், கோலங்களும், மாவிலைத் தோரணங்களும் இந்நாளுக்குத் தனி அழகு சேர்த்தன.

பக்தர்கள் “பொங்கலோ பொங்கல்” எனக் கூவி தை மாதத்தின் மகிழ்ச்சியை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துகொண்டனர்.

அதேவேளையில், கோர்ட்டுமலை, ஸ்ரீ கணேசர் ஆலயத்திலும் விநாயகப் பெருமான் முன்னிலையில் பொங்கல் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோயில்களில் மட்டுமல்லாது வீடுகளிலும் பொங்கல் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்து, மக்கள் வீட்டின் வெளிப்புறத்தில் மண்பானையை அலங்கரித்து, சூரியப் பொங்கலை கொண்டாடினர்.

வீடுகளை தாண்டி, தற்போது பொங்கல் பண்டிகை நாடாளவில் ஒற்றுமை பொங்கல், வணக்கம் மடானி பொங்கல் என பெரும் பண்டிகையாகக் கொண்டாட்டப்பட்டு வருகிறது.

இது தமிழர்களின் கலாச்சார சின்னமாகவும், சமூக ஒற்றுமையின் அடையாளமாகவும் திகழ்கிறது.

காலங்கள் மாறினாலும், தமிழரின் பண்பாட்டு விழாக்கள் மாறாமல் இருப்பதற்கு இந்தப் பொங்கல் பண்டிகை சிறந்த உதாரணமாக இருந்து வருகிறது.

ஒற்றுமையோடு பொங்கல் விழாவைக் கொண்டாட வணக்கம் மலேசியாவும் வாழ்த்துகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!