
ஜோகூர் பாரு, அக்- 29,
பத்து பஹாட்டில் ஆறு வயது சிறுவன் கழுத்தில் வெட்டப்பட்ட சம்பவத்தில் பிரபலமான ஆன்லைன் விளையாட்டு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சாத்தியத்தை போலீஸ் நிராகரிக்கவில்லை. கடந்த திங்கட்கிழமை பத்து பஹாட், பாரிட் ராஜா , கம்போங் பரிட் நிபா லாட்டில் நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் கழுத்தில் வெட்டுக்காயங்களும் உடலில் கத்திக்குத்து காயங்களும் காணப்பட்டதாக ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ அப் ரஹ்மான் அர்சாட் ( Ab Rahaman Arsad ) தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவுவதற்காக, இரண்டு சிறார்களின் 40 வயதுடைய பெற்றோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் . சிறுவனுக்கு ஏற்பட்ட காயங்கள் அவனது 9 வயது சகோதரனால் ஏற்பட்டிருக்கலாம் என்று தொடக்கக் கட்ட விசாரணை மூலம் போலீசார் கண்டறிந்தனர்.
இருப்பினும், சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவரின் சகோதரர் தனது ஸ்மார்ட்போனில் ஒரு விளையாட்டு பயன்பாட்டை வைத்திருப்பதற்கான தொடர்பு இருக்கலாம் என அப் ரஹ்மான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவரின் சகோதரர் அதிகமாக விளையாடி வீடியோ கேமில் ஒரு மில்லியன் புள்ளிகளை சேகரித்துள்ளார் என்றும் விவேக தொலைபேசியில் இருந்த அந்த புள்ளிகளை இளைய சகோதரர் சேதப்படுத்தியதால் ஆத்திரமடைந்த சிறுவன் தனது வீட்டிலிருந்து ஒரு கத்தியை எடுத்து தனது சொந்த சகோதரனை காயப்படுத்தியதாக நம்பப்படுகிறது.



