
காஜாங், டிசம்பர்-12, நாட்டில், சிறைவாசத்தின் போது படித்து PhD டாக்டர் பட்டம் பெற்ற முதல் கைதிக்கு, அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தனது பிறந்தநாளை முன்னிட்டு, சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா, முராட் (இயற்பெயர் அல்ல) எனும் அவ்வாடவருக்கு அரச மன்னிப்பு வழங்கினார்.
வணிக நிர்வாகத்தில் PhD வைத்துள்ள அந்நபர் 2001-ஆம் ஆண்டிலிருந்து சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
காஜாங் சிறைச்சாலையின் போதைப்பித்தர் மறுவாழ்வு மையத்தில், Tahanan Limpah Sultan என்ற பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட போது முராட்டுக்கு 14 வயது மட்டுமே.
சிறைச்சாலையிலிருந்தவாறே கல்வியைத் தொடர்ந்த முராட், PhD பட்டம் வரை படித்து தேறியிருப்பதாக, சிறைச்சாலைத் துறை தனது facebook-கில் கூறியது.
முராட்டின் விடுதலைக்கு முன், அரச மன்னிப்பு உத்தரவு காஜாங் சிறைச்சாலையில் அவரிடம் வாசித்துக் காட்டப்பட்டது.
தமக்கு மன்னிப்பு வழங்கிய சிலாங்கூர் சுல்தானுக்கும், கல்வியைத் தொடர்ந்து PhD பட்டம் வாங்கும் அளவுக்கு தமக்கு வாய்ப்பு வழங்கிய சிறைச்சாலைத் துறைக்கும், முராட் மனதார நன்றித் தெரிவித்துக் கொண்டார்.