
பெய்ஜிங் – ஆகஸ்ட் 29 – சீனாவில் தந்தை ஒருவர் தனது இளைய மகன் தனது மூத்த மகனை அடித்ததால், அச்சிறுவனைத் தண்டிக்கும் விதமாக, நெடுஞ்சாலையோரத்தில் விட்டுச் சென்ற சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வழியாக மோட்டாரில் சென்று கொண்டிருந்த யூடியூபர் ஒருவர் சிறுவனை கண்டதும், அவன் நிலையை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதைத் தொடர்ந்து அக்காணொளி வலைத்தளத்தில் வைரலானது.
தன் அப்பா தன்னை காரிலிருந்து இறக்கச் சொன்னார் என்றும் தன் சகோதரனை அடித்ததால் தன் தந்தை கோபமாக இருந்தார் என்றும் சிறுவன் கூறிய காட்சி தற்போது சமூக ஊடகத்தில் பரவியுள்ளது.
சம்பவத்திற்கு பிறகு சிறுவன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
இதுகுறித்து சமூக ஊடகங்களில் பெரும் எதிர்ப்பு அலைகள் எழுந்ததைத் தொடர்ந்து ஒரு குழந்தையை தண்டிக்க பல வழிகள் இருக்கின்றன எனவும் இவ்வாறு நெடுஞ்சாலையில் விட்டுச் செல்வது ஆபத்தானது எனவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மன்னிப்பு கோரிய சிறுவனின் தந்தை, தான் குழந்தையை பயமுறுத்தும் நோக்கத்தில்தான் இப்படி செய்தேன் என்று விளக்கம் அளித்தார்.
ஆனால் சமூக ஊடக பயனர்கள் அவரது செயலை கண்டித்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.