கோலாலம்பூர், நவம்பர்-25, சீன மொழி அறிவிப்புப் பலகைகளுக்கு எதிராக கோலாலம்பூர் மாநகர மன்றம் DBKL எடுத்து வரும் அமுலாக்க நடவடிக்கைகள், எல்லைமீறிய பொறாமையின் வெளிப்பாடே என சுற்றுலா அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் (Datuk Seri Tiong King Sing) கடுமையாகச் சாடியுள்ளார்.
DBKL-லின் செயல், பல்லின மக்கள் வாழும் நாடு என்ற மலேசியாவின் தோற்றத்தைப் பாதிக்கக்கூடும் என்றார் அவர்.
அடுத்தாண்டு மலேசியா ஆசியான் உச்சநிலை மாநாட்டை ஏற்று நடத்துகிறது; வட்டாரத் தலைவர்கள் பங்கேற்கும் அம்மாநாட்டின் போது நாட்டின் பல்லினக் கலாச்சார அம்சங்களையும் பிரபலப்படுத்த நமக்கு நல்ல வாய்ப்பாகும்.
இது ஏன் DBKL-லுக்கு புரியவில்லை என டத்தோ ஸ்ரீ தியோங் கேட்டார்.
பல்லினக் கலாச்சாரம் என்பது பலவீனமல்ல; போட்டித்தன்மைமிக்க கூடுதல் பலமாகும்.
எனவே, இன-மத விவகாரங்களில் குறுகிய மனப்பான்மையையும் எல்லை மீறும் செயலையும் விட்டொழித்தால், ஒன்றுபட்ட மக்களோடு சிறந்த எதிர்காலத்தை உடைய நாட்டை உருவாக்கலாமென்றார் அவர்.
அறிவிப்புப் பலகைகளைக் குறி வைப்பதற்கு பதிலாக, கோலாலம்பூரில் அடிப்படை வசதிக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, சுற்றுப்பயணிகளைக் கவரும் அம்சங்களை அதிகரிப்பது போன்ற பயனுள்ள காரியங்களில் DBKL ஈடுபட வேண்டுமென அமைச்சர் அறிவுறுத்தினார்.
மலாய் மொழி இடம் பெறாத அறிவிப்புப் பலகைகளுக்கு எதிராக, சிகாம்புட், புடு, ஜாலான் சீலாங் உள்ளிட்ட இடங்களில் DBKL அண்மையில் பேரளவிலான அமுலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.
DBKL-லுடன் Dewan Bahasa dan Pustaka, போலீஸ் ஆகியவையும் அந்த அமுலாக்க நடவடிக்கையில் இறங்கியதாகத் தெரிகிறது.