Latestமலேசியா

செந்தோசாவின் சொத்து: இளம் கிரிக்கெட் வீராங்கனை Dhanusri-க்கு குணராஜ் வாழ்த்து

செந்தோசா, ஜனவரி-4,

புக்கிட் திங்கி, செந்தோசாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீராங்கனை Dhanusri Sri Muhunan, தாய்லாந்தில் நடைபெற்ற T10, T20 கிரிக்கெட் தொடரில் முறையே வெண்கலம், வெள்ளிப் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளார்.

இது நாட்டுக்கும், சிலாங்கூருக்கும், செந்தோசாவுக்கும் பெருமை என, அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் புகழாரம் சூட்டினார்.

22 வயது Dhanusri ஆசிய பசிஃபிக் பல்கலைக்கழகத்தில் கணித ஆபத்தியல் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

10 வயதிலிருந்தே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டு விளையாடி வரும் இவர், தனது திறமையால் தேசிய அணிக்குத் தேர்வாகி, வெறும் 14-கே வயதில் மலேசியா சார்பில் மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

2018 ஜூன் 9-ஆம் தேதி வங்காளதேச அணிக்கு எதிராக WT20I போட்டியே இவர் மலேசியாவை பிரதிநிதித்த முதல் ஆட்ட மாகும்.

இதுவரை 2 சீ போட்டிகளில் பங்கேற்ற அனுபவமும் இவருக்குண்டு; 2023 கம்போடியா சீ போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களையும், அண்மையில் நடந்து முடிந்த தாய்லாந்து சீ போட்டியில் 1 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கதையும் Dhanusri வென்றுள்ளார்.

தவிர, 2023-ல் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் பங்கெடுத்துள்ளார்.

19 வயதுக்குக் கீழ்பட்ட மலேசிய மகளிர் அணியின் துணை கேப்டனாகவும், 2024 சுக்மா போட்டியில் சிலாங்கூர் அணியின் கேப்டனாவும் அவர் இருந்துள்ளார்; அதில் அவர்கள் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

தேசிய மகளிர் கிரிக்கெட் போட்டியில் கோலாலம்பூரும் சிலாங்கூரும் வாகை சூடவும் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

Dhanusri-யின் இந்த வெற்றி, இளம் தலைமுறைக்கு, குறிப்பாக விளையாட்டு வீராங்கனைகளுக்கும், முயற்சி, ஒழுக்கம் மற்றும் அனைத்துலக மேடையில் சிறப்பை நோக்கி செல்லும் ஊக்கமாக இருக்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!