
ஈப்போ, ஆகஸ்ட்-3,
ஈப்போ, செமோரில் (Chemor) ஓர் இந்தியத் தம்பதி தங்க இடமின்றி கடந்த 2 வாரங்களாக காருக்குள்ளேயே தங்கியிருக்கும் அவலம் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளியான 55 செல்வம் முனியாண்டி, அவரின் 56 வயது மனைவி லக்ஷ்மி நாராயணன் ஆகியோரே அவர்களாவர்.
இவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை.
செல்வம் முன்பு லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தார்; 2 சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்ததால், 5 வருடங்களு முன்பே இருந்த வேலையும் போய் விட்டது.
துப்புரவுப் பணியாளராக வேலை செய்து மனைவி, கணவரைப் பராமரிக்க வேண்டி, அவரும் வேலையிலிருந்து நின்று விட்டார்; அவருக்கு ஆஸ்மா நோய் வேறு.
வாடகை வீட்டில் தங்கும் அளவுக்கு இருவருக்கும் வருமானம் கிடையாது; இந்நிலையில் தங்க வீடில்லாமல் கொஞ்ச காலம் ஆதரவற்ற இல்லத்தில் தங்கியிருந்த இருவரும், அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
சுங்கை சிப்புட் செல்லும் வழியில் Chemor Park, Taman Emas அருகே இந்த 2 வாரங்களாக காருக்குள்ளேயே தங்கியுள்ள இருவரும், வருவோர் போவோரின் கரிசனத்தில் நாட்களை ஓட்டுகின்றனர். அப்படி உதவியவர்களில் சோமசுந்தரம் என்பவரும் ஆவார்.
வழிப்போக்கர்கள் அவ்வப்போது உணவு வாங்கிக் கொடுப்பதும், சிலர் செலவுக்குப் பணம் கொடுப்பதுமாக இருந்தாலும், தங்க இடமில்லாமல் இருப்பது இவர்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை.
எனவே, குடியிருக்க நிரந்தரமாக ஒரு வீட்டைப் பார்த்துக் கொடுக்குமாறு இத்தம்பதி பொதுமக்கள் அல்லது அரசு தரப்பின் உதவியை நாடுகின்றனர்.