
கோலாலாம்பூர், மே-6,-போலீஸ் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்ற நபர், கோலாலம்பூர் ஜாலான் அம்பாங்கில் இரண்டு கார்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதோடு, போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 6.15 மணியளவில், பண்டான் இண்டாவில் ரோந்து போலீஸார் சந்தேகத்தின் பேரில் ஒரு Perodua Bezza காரை நிறுத்த முயன்றனர்.
ஆனால், அந்த 31 வயது ஓட்டுநர் போலீஸாரிடம் சிக்காமலிருக்க காரை வேகமாக ஓட்டித் தப்பினார்.
போகும் வழியில், ஜாலான் அம்பாங் சாலை சமிக்ஞை விளக்கில் நின்றிருந்த மற்ற இரு கார்கள் மீது மோதியதில் அந்த வாகனங்கள் சேதமடைந்தன.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
சோதனையின்போது, அந்த நபரிடமிருந்து 4.7 கிராம் yaba போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.
பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதும் உறுதிச் செய்யப்பட்டது.
அவர் மீது குற்றவியல் சட்டம், சாலைப் போக்குவரத்து சட்டம் மற்றும் அபாயகர போதைப் பொருள் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
மேல் விசாரணைக்காக அவர் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.



