
கோலாலம்பூர்-வங்காளதேச தொழிலாளர்களுக்காக மலேசிய தொழிலாளர் சந்தையை மீண்டும் திறப்பதற்கு பரிசீலிக்குமாறு, வங்காளதேச பிரதமர் தாரிக் ரஹ்மான், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொழிலாளர் சுரண்டல் மற்றும் கட்டாயத் தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பான நீண்டகால கவலைகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடிய நிலையில், இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
வங்காளதேசத்திற்கு வெளிநாட்டு பணப்பரிமாற்ற வருவாயுக்கு முக்கிய பங்காற்றும் நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும்.
எனினும், தொழிலாளர்கள் கடன் சுமையில் சிக்கி வேலைவாய்ப்பைப் பெற வேண்டிய நிலை மற்றும் கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, 2024 முதல் வங்காளதேசத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதில் மலேசியா கட்டுப்பாடுகளை விதித்தது.
மேலும், 2023ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியுடன் மலேசியா வந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், வாக்குறுதியளிக்கப்பட்ட வேலைகள் இல்லாததால் சிக்கலில் சிக்கினர்.
இதனால் அவர்கள் சட்டவிரோத வேலைகளை நாட வேண்டிய சூழல் உருவாகி, கைது மற்றும் நாடுகடத்தல் அபாயத்திற்கும் ஆளாகினர்.
“சட்டவிரோதமாக தங்கியுள்ள தொழிலாளர்களை முறைப்படுத்துவது மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள வங்காளதேச குடிமக்களை இயன்றவரை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவது குறித்தும் நான் பேசியுள்ளேன்,” என்று ரஹ்மான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, தொழிலாளர் ஆட்சேர்ப்பு செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் இரு நாடுகளும் நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொண்டதாக அன்வார் தெரிவித்தார்.
“தனிப்பட்ட நிறுவனங்களின் லாபத்திற்காக தொழிலாளர்கள் சுரண்டப்படுவது அல்லது தவறாக நடத்தப்படுவது இனியும் ஏற்றுக்கொள்ளப்படாது,” என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது முதலீட்டு மேம்பாடு, கலாசார ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. மேலும், இரு நாடுகளும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உறுதியளித்தன.
பதவியேற்ற பின்னர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக மலேசியாவுக்கு வந்துள்ள தாரிக் ரஹ்மான், முதலீடுகளை ஈர்த்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் செயல்பட்டு வருகிறார்.



