
கோலாலம்பூர், ஆகஸ்ட்-9 – அம்பாங் – ஸ்ரீ பெட்டாலிங் வழித்தட LRT இரயிலுக்குள் பயணி ஒருவர் மதுபானம் அருந்துவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வெள்ளிக்கிழமைக் காலை 9.30 மணியளவில் எடுக்கப்பட்ட அந்தப் பதிவில், சம்பந்தப்பட்ட நபர் இரயிலுக்குள் உணவு உட்கொண்டு, மதுபானம் அருந்தியதோடு, குப்பைகளையும் அங்கேயே போட்டுச் சென்றுள்ளார்.
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளிடையே இந்தச் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ள Rapid KL நிறுவனம், இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், இரயில்கள், platform தளங்கள் மற்றும் நிலையங்களுக்குள் உணவு உண்பதோ அல்லது பானங்கள் அருந்துவதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அது மீண்டும் நினைவூட்டியுள்ளது.
இதுபோன்ற விதிமீறல்கள் தொடர்பாக பயணிகள் உடனடியாக அதிகாரிகளிடமோ அல்லது அதிகாரப்பூர்வ புகார் மையத்திலோ தெரிவிக்குமாறு Rapid KL கேட்டுக் கொண்டது.



