
சிங்கப்பூர், செப்டம்பர்-23,எதிர்வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல், தரைவழியாக சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டு வாகனங்களுக்கும் முறையான வாகன நுழைவு அனுமதி அட்டையான VEP கட்டாயமாக்கப்படுகிறது.
சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் ICA வெளியிட்டுள்ள தகவலின்படி, Woodlands மற்றும் Tuas ஆகிய இரு சோதனைச் சாவடிகள் வழியாக நுழையும் வெளிநாட்டு வாகனங்களுக்கும் இந்த புதிய விதிமுறை பொருந்தும்.
இதன்படி, பயணிகள் சிங்கப்பூர் வருகை அட்டையை (SGAC) சமர்ப்பிக்கும் போதே, அவர்களின் வாகனத்திற்கான VEP அனுமதி செல்லுபடியாகிறதா என்பது தானியங்கி முறையில் சரிபார்க்கப்படும்.
முறையான VEP அனுமதி இல்லாத பட்சத்தில், பயணிகளால் SGAC படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க முடியாது.
இதனால் அவர்கள் எல்லை வழியாக நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விபத்துகள் ஏதும் நேரிட்டால் உரிய இழப்பீடு மற்றும் பாதுகாப்பை உறுதிச் செய்யும் நோக்கில், செல்லுபடியாகும் மோட்டார் வாகனக் காப்புறுதி இருந்தால் மட்டுமே VEP அனுமதி வழங்கப்படும் என்று ICA தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடும் மலேசிய வாகனமோட்டிகள், எல்லையில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க முன்கூட்டியே தங்களின் VEP அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



