
கோலாலம்பூர், செப்- 22-நேப்பாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட மோசமான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து காணாமல் போயிருக்கும் 55 மலேசியர்களின் நிலை குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்நாட்டுப் பிரதமருடன் பேசியிருக்கிறார். Balendra Shahவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாம் நிலைமையைக் கேட்டறிந்ததாக பிரதமர் தெரிவித்தார்.
சீனாவுக்கான மூன்று நாள் அதிகாரத்துவ பயணத்தைத் தொடங்கும் முன் நடைபெற்ற உரையாடலில், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் கவலைகளைத் தாம் எடுத்துரைத்ததாக அன்வார் கூறினார்.
தேடல் நடவடிக்கைகளில் உறுதியான முடிவு கிடைக்காத நிலையில், குடும்பங்கள் சட்ட, நிதி மற்றும் நிர்வாக விவகாரங்களை எதிர்கொள்ள முறையான தகவல்கள் அவசியம். அது தொடர்பான பரிந்துரைகளை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை நேப்பாளப் பிரதமருக்கு அனுப்பவுள்ளதாகவும் அன்வார் கூறினார்.
அதேவேளை, சவாலான சூழல் நிலவினாலும் தேடுதல் மற்றும் அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என Shah உறுதியளித்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், 55 மலேசியர்களின் நிலையை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நேப்பாள அரசு, அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மலேசியாவின் SMART குழுவும் நேபாளத்தில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதன் களப்பணி நிறைவடைந்த பின்னரும் அந்நாட்டில் தேடுதல் மற்றும் அடையாளம் காணும் முயற்சிகள் தொடர்கின்றன.
இவ்வேளையில், நேப்பாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 6,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும் அனைத்துலக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.



