
உத்தரகாண்ட், செப் 23 –குழந்தைகளிடையே கைபேசி பயன்பாட்டைக் குறைக்கும் நல்ல நோக்கில் பள்ளி ஒன்று நடத்திய விழிப்புணர்வு நாடகம், மாணவர்களைக் கதறி அழவைத்ததால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில், அதிக நேரம் கைபேசி பயன்படுத்தியதால் மாணவர் ஒருவரின் கண்கள் அகற்றப்பட்டதாக நாடகம் நடத்தப்பட்டது.
அந்த மாணவரின் கண்களில் சிவப்பு நிறத் திரவத்தைப் பூசி, துணியால் கட்டி, கண்கள் அகற்றப்பட்டதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கியது பள்ளி நிர்வாகம்.
இதனை உண்மை என நம்பிய சிறுவர்கள், அச்சத்தில் கதறி அழுததோடு, இனி கைபேசியைப் பயன்படுத்தவே மாட்டோம் எனக் கூறிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.
கைபேசி பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கம் நல்லதாக இருந்தாலும், சிறுவர்களை அச்சுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளியின் அணுகுமுறை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள கல்வித்துறை, பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கோரி நோட்டீசும் அனுப்பியுள்ளது.



