
பாத்தாங் பாடாங், ஆகஸ்ட்-9 – பேராக்கில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நிலப் பிரச்னைக்கு இறுதியாகத் தீர்வு காணப்பட்டுள்ளது.
சுங்காய் (Sungkai) மற்றும் குவாலா பிக்காம் (Kuala Bikam) பகுதிகளைச் சேர்ந்த 120 குடும்பங்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக நிலப் பட்டாக்களைப் பெற்றுள்ளனர்.
சுங்காய் DAP சட்டமன்றத் தொகுதி ஏற்பாடு செய்த இரவு விருந்து உபசரிப்பில், வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் இந்த நிலப் பட்டாக்களை வழங்கினார்.
பல்லினங்களைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் இதில் கலந்துகொண்டனர்.
“மடானி அரசாங்கம் இன பாகுபாடின்றி, மக்களின் நலனுக்கே முன்னுரிமை அளிப்பதற்கு இது ஒரு சான்றாகும். இத்தீர்வு வருங்கால சந்ததியினருக்குப் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிச் செய்கிறது” என தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான ஙா கோர் மிங் தமதுரையில் கூறினார்.
மக்களின் கனவை நனவாக்கப் பாடுபட்ட சுங்கை சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ A. சிவநேசன் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிலப் பட்டாக்கள் மூலம் மக்களின் நீண்ட நாள் உரிமைப் போராட்டம் நிறைவேறியுள்ளது.



