Latestமலேசியா

குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறிய BFM வானொலி நிலையம்; முன்னாள் தயாரிப்பாளருக்கு RM3.58 லட்சம் இழப்பீடு

கோலாலம்பூர், செப்டம்பர் 24 — பாலியல் தொந்தரவு மற்றும் தகாத நடத்தை குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறியதால், முன்னாள் தயாரிப்பாளரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான உமாபாகன் கே. அம்பிகைப்பாகனுக்கு 358,400 ரிங்கிட் இழப்பீடு வழங்குமாறு BFM வானொலி நிலையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம், BFM வானொலி நிலையத்தில் பாலியல் தொந்தரவு இடம்பெற்றதாக அடையாளம் தெரியாத மின்னஞ்சல் மூலம் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதையடுத்து நிறுவனம் வெளிப்புற விசாரணையை மேற்கொண்டது. பின்னர், உமாபாகனுக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் வழங்கப்பட்டு, 2019 ஜனவரி 4ஆம் தேதி அவரது பணி உடனடியாக நிறுத்தப்பட்டது.

எனினும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. சில குற்றச்சாட்டுகள் தெளிவற்றவையாகவும், போதிய ஆவண ஆதாரங்கள் இல்லாதவையாகவும் இருந்தன. மேலும், சில குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களும், புகார் அளித்ததாகக் கூறப்பட்ட சிலரின் அடையாளங்களும் உமாபாகனுக்கு வழங்கப்படவில்லை.

விசாரணை நடத்துவதற்கு சந்தேகம் போதுமான காரணமாக இருக்கலாம் என்றாலும், பணிநீக்கத்தை நியாயப்படுத்துவதற்கு ஆதாரம் அவசியமென நீதிமன்றம் கூறியது. இதனால், உமாபாகன் நியாயமான காரணமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டதாக தீர்ப்பளித்த நீதிமன்றம், அவரை மீண்டும் பணியில் சேர்க்காமல், 51,200 ரிங்கிட் இழப்பீடும் 307,200 ரிங்கிட் நிலுவைச் சம்பளமும் சேர்த்து மொத்தம் 358,400 ரிங்கிட் வழங்க உத்தரவிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!