
கோலாலம்பூர், ஜன 22- கோலாலம்பூர் ஜாலான் பெட்டாலிங்கில் விபச்சார நடவடிக்கைகளை நடத்திவந்த மூன்று கடை வீடுகளில் நேற்றிரவு 8 மணியளவில் 15 பேர் கொண்ட குடிநுழைவு அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அந்த கடை வீடுகள் இரண்டு இரும்பு கதவுகளைக் கொண்டு பூட்டப்பட்டிருந்ததால் உள்ளே நுழைவதில் அதிகாரிகள் சிரமத்தை எதிர்நோக்கினர்.
இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு முன்பு அங்கு சோதனை செய்யப்பட்ட போதிலும் விபச்சார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதைத் தொடர்ந்து நேற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையின்போது விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதன் தொடர்பில் 11 வெளிநாட்டு பெண்களுடன் 5 ஆடவர்களுடன் உள்நாட்டைச் சேர்ந்த மூன்று ஆண்களும் கைது செய்யப்பட்டதாக கோலாலாம்பூர் குடிநுழைவுத்துறையின் இயக்குநர் வான் முகமட் சவ்பி வான் யூசோப் ( Wan Mohammed Saupee Wan Yusoff ) தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட பெண்களில் 10 இந்தோனேசிய பெண்களும் வியட்னாம் பெண் ஒருவரும் அடங்குவர். உள்நாட்டைச் சேர்ந்த மூன்று ஆண்களும் அந்த விடுதிகளின் பராமரிப்பாளர்களாக இருந்ததாக தெரியவருகிறது.
இவர்கள் அனைவரும் குடிநுழைவு சட்டம் மற்றும் அது தொடர்பான விதிகளின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



