ஜித்ராவில் லாரி & மோட்டார் மோதி விபத்து : தம்பதியினர் பலி

ஜித்ரா, செப்டம்பர் -30,
ஜித்ரா அரசு மருத்துவமனைக்கு அருகிலுள்ள சாலையில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் கணவன் மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் கிடைக்கப் பெற்றவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு குழுவினர் உடனடியாக தீயணைப்பு வேளைகளில் ஈடுபட்டனர் என்று ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) தலைவர், துணை மூத்த அதிகாரி நூர் அஸ்ஹார் தாஜுடீன் தெரிவித்தார்.
சிமெண்ட் ஏற்றிச் சென்ற ஹினோ வகை லாரியும், யமஹா நுவோ எல்சி (Yamaha Nouvo LC) வகை இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 60 வயதுக்கும் மேற்பட்ட அந்த தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில் அந்த லாரி ஓட்டுநர் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினார் என்று அறியப்படுகின்றது.
தீயணைப்புப் படையினர் சிக்கியிருந்த உடல்களை வெளியே எடுத்து, மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.