
மெல்பர்ன், ஜூன்-11 – ஆஸ்திரேலியாவின் Qantas நிறுவனத்துக்குச் சொந்தமான Jetstar Asia மலிவுக் கட்டண விமானத்தின் சேவை ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
அதிகரித்து வரும் விநியோகச் செலவுகள், உயரும் விமான நிலையக் கட்டணங்கள், மலிவுக் கட்டண விமானங்களுக்கு இடையிலான கூடுதல் போட்டிகள் ஆகியவற்றால் அது பாதிக்கப்பட்டிருப்பதே அதற்குக் காரணம்.
இரத்து செய்யப்பட்ட விமானங்களில் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள Jetstar Asia வாடிக்கையாளர்களுக்கு முழுப் பணமும் திருப்பித் தரப்படும்;
அவர்களுக்கு மாற்று விமானச் சேவைகளை வழங்குவதற்கும் முயற்சிகள் எடுக்கப்படுமென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Jetstar Asia தற்போது சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் கோலாலாம்பூர் மற்றும் பினாங்கு, இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பின்ஸ், சீனா, இலங்கை, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 16 இடங்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது.
இன்னும் 7 வாரங்கள் எஞ்சியிருக்கும் நிலையில், Jetstar Asia-வின் 13 Airbus A320 விமானங்கள் கட்டம் கட்டமாக ஆஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் மாற்றி விடப்படும் என்றும் Qantas கூறியது.
Jetstar Asia மூடப்படுவதால் 500-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.