
ஜெராம் பாடாங், ஜூலை-29- நெகிரி செம்பிலான், ஜெராம் பாடாங்கில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெறவிருந்த கால்பந்துப் போட்டி, ஆளுங்கட்சியின் அரசியல் தலையீட்டால் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக, ஜெராம் பாடாங் பெரிக்காத்தான் நேஷனல் ஒருங்கிணைப்பாளர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்யும் பல்வேறு சமூக நிகழ்ச்சிகளுக்கு இப்படித்தான் சிக்கல்கள் ஏற்படுத்தப்படுகின்றன; இந்த அரசியல் கீழறுப்பு வேலைகளில் ஈடுபடுவதற்கு பதிலாக, தேர்தலில் நேருக்கு நேர் மோதும் திராணி வேண்டுமென, சஞ்சீவன் கூறியுள்ளார்.
மாநிலத்தை ஆளும் பக்காத்தான் ஹராப்பான்- தேசிய முன்னணி கூட்டணி அரசு செய்ய வேண்டிய பல வேலைகள் நிலுவையில் உள்ளன; அவற்றுக்கு முதலில் தீர்வு காணுங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இப்படி தீர்க்கப்பட வேண்டிய மக்கள் பிரச்னைகள் குவிந்துகிடக்கும் நேரத்தில், அவற்றை நிவர்த்தி செய்யாமல் எதிர்கட்சிகளுக்கு தொந்தரவு விளைவிப்பதிலும் அவர்களை முடக்குவதிலும் ஆளுங்கட்சி முனைப்புக் காட்டுகிறது.
இந்த அரசியல் விளையாட்டுகளை உடனடியாக நிறுத்திக் கொண்டு, மக்கள் பணியில் கவனம் செலுத்துமாறு ஆளுங்கட்சிக்கு நினைவுறுத்தியுள்ளார்.