
ஜோகூர் பாரு, மார்ச் -3 – சுமார் 20 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, ஜோகூர் மாநிலத்தில் இந்தியர்களுக்கான ஈமச்சடங்கு காரியங்களை மேற்கொள்ளும் முதலாவது ‘இந்து கருமக்கிரிய மையம்’ உருவாகியுள்ளது.
சுமார் 0.66 ஏக்கர் நிலப்பரப்பில், 1.93 மில்லியன் ரிங்கிட் நிர்மாணிப்பு செலவில் கட்டப்பட்ட இந்த மையம், இம்மாதம் 20 ஆம் தேதி முதல் செயல்படும்.
இந்திய சமூகத்தின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய ஒரு முக்கிய அடையாளமாகக் இந்த மையம் கருதப்படுவதோடு இதற்கான சிறப்பு பிரார்த்தனையை சுல்தானா ரோகாயா அறக்கட்டளை தலைவர் சுகுமாறன் மற்றும் அவரது துணைவியார் டத்தின் அனிதா தேவி ஏற்று நடத்தினர்.
இந்த கருமக்கிரிய மையத்தின் நிர்வாக மற்றும் மேலாண்மை பொறுப்புகள் ஜோகூர் மாநில இந்து சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறப்பு பிரார்த்தனைக்குப் பின் ஜோகூர் மாநில ம.இ.காவின் தலைவரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான ரவீன் குமார் தெரிவித்தார்.
இந்த கருமக்கிரிய மையத்திற்கான கோரிக்கையும் போராட்டமும் பல ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், ஆறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அது ஜோகூர் சுல்தானின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், இறுதியாக தெலுக் ஜாவாவில் இந்த மையம் மிகப் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டது. இந்த புனித நாளை முன்னிட்டு, மலேசிய பேரரசர் தமது மனமார்ந்த வாழ்த்துகளை டத்தோ சுகுமாறன் மூலமாக தெரிவித்தார்.
ஜோகூர் மாநிலத்தில் வரலாற்றுப் பூர்வமாக நடைபெற்ற இந்த சிறப்பு பூஜை நிகழ்வில் ஜொகூர் மாநில ம.இ.கா துணைத் தலைவர் நிலா ராஜா, ம.இ.கா தொகுதி தலைவர்கள்,ஜோகூர் மாநில மலேசிய இந்து சங்கத் தலைவர் விஜயன், அரசு சார்பற்ற சங்கத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.



