
ஜோகூர் பாரு, ஜூலை 14 – கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை, போலீசார் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில், விபச்சார தொழில் செய்து பணம் பறிக்கும் கும்பலைச் சார்ந்த ஒன்பது பேர் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டு, இரண்டு இளைஞர்கள் உட்பட மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
விபச்சார வீடொன்றில் நடத்தப்பட்ட அச்சோதனையில், அந்த கும்பலின் முக்கிய நபர்களான ஏழு உள்ளூர் ஆண்கள் மற்றும் 17 முதல் 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் அடங்கிய ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஜோகூர் காவல் துறைத் தலைவர் டத்தோ எம் குமார் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கையில், போலீசார் பாதிக்கப்பட்ட 26 வயது இளைஞனையும், கட்டாய உழைப்பு சுரண்டல் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நம்பப்படும் இரண்டு பதின்ம வயதினர் மற்றும் 16 வயதுடைய பெண்ணொருவரையும் மீட்டெடுத்துள்ளனர்.
சம்பவத்தின் போது, 27 கைத்தொலைபேசிகள், தனிப்பட்ட ஆவணங்கள், விமான டிக்கெட்டுகள், பணப் பரிமாற்ற ரசீதுகள், கலப்பு பணம், மடிக்கணினிகள், 49 சிம் கார்டுகள், வேலைவாய்ப்பு புத்தகங்கள், ரிமோட் கண்ட்ரோல்கள் மற்றும் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
லாவோஸ் மற்றும் தாய்லாந்து வரை நெட்வொர்க்கைக் கொண்ட இந்தக் கும்பல், நவம்பர் 2024 முதல் செயல்படத் தொடங்கியது என்றும், கும்பலின் செயல்பாடு ஒரு அழகான பெண்ணாகக் காட்டி ஒரு போலி சமூக ஊடகக் கணக்கை உருவாக்குவது என்றும் முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கும்பலை விட்டு வெளியேற விரும்பினால் 30,000 ரிங்கிட் வரை பணம் செலுத்த வேண்டுமென்று அச்சுறுத்தப்பட்டனர் என்றும் இந்த வழக்கு தொடர்பான மேல் விசாரணை தொடரப்பட்டுள்ளது என்றும் குமார் தெரிவித்துள்ளார்.