
ஜோகூர் பாரு, மார்ச் 9 – ஜோகூரில் , Jalan Johor Bahru – Air Hitam சாலையின் 19 ஆவது கிலோமீட்டரில் நேற்றிரவு , ஒரு விரைவு பஸ் கவிழ்ந்து 10 பயணிகள் காயமடைந்ததற்கு கவனக்குறைவாக மற்றும் அலட்சியமாக அதனை ஓட்டியதே காரணம் என்று தொடக்கக்கட்ட போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இருப்பினும், உள்நாட்டைச் சேர்ந்த 51 வயது உதவி பஸ் ஓட்டுநர் மற்றும் ஒன்பது பயணிகளுடன் 62 வயது பஸ் ஓட்டுநர் ஓட்டிச் சென்ற அந்த பஸ் தொடர்பான விபத்து குறித்து போலீசார் இன்னும் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
அந்த பஸ் கோலாலம்பூர் (TBS) முனையத்திலிருந்து ஜோகூர் பாருவின் லார்கினில் உள்ள பஸ் முனையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானதாக ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் உதவிக் கமிஷனர் ராடின் ரம்லான் ராடின் தஹா ( Radin Ramlan Radin Taha ) தெரிவித்தார்.
கூலாய் நோக்கிச் செல்லும் U-டர்ன் பாதையில் , வளைவை அடைந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, பின்னர் Johor Baru – Air Hitam சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் அந்த பஸ் விழுந்ததாக நம்பப்படுகிறது.
பஸ்ஸின் உதவி ஓட்டுநர் மற்றும் ஒன்பது பயணிகள் தலை, உடல், கைகள் மற்றும் கால்களில் காயமடைந்து சுல்தானா அமினா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பஸ் ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்பதோடு ஓட்டுநருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.
1987 ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 43 ஆவது பிரிவின் (1) இன் கீழ் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுவதாக ராடின் ரம்லான் கூறினார்.



