
கூலாய், ஏப் 7 – அண்மையில் கூலாய் , Bandar Indahpura வில் உள்ள விலங்கு பராமரிப்பு மையத்தில் இந்தியர் என்று நம்பப்படும் ஒருவரை உள்ளூர் ஆடவர் அறைந்ததைக் காட்டும் காணொளி வைரலானதை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.
எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் புகார் செய்துள்ளதாக கூலாய் போலீஸ் தலைவர் டான் செங் லீ ( Tan Seng Lee) தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் 506 மற்றும் 323பிரிவின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் சாட்சிகள் மற்றும் சந்தேக நபர்களைக் கண்டறிய உதவுமாறும், விசாரணைக்கு உதவுவதற்கு உரிய தகவல்களை வழங்குமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார். சட்டத்தை மீறும் வகையில் சொந்தமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு டான் செங் லீ ஆலோசனை தெரிவித்தார்.
முன்னதாக, இரண்டு நிமிடம் 16 வினாடிகள் கொண்ட வீடியோ கிளிப்பில், வெள்ளைச் சட்டை அணிந்த ஒருவர், பணம் திருடியதாகக் கூறப்படும் சிவப்புச் சட்டை அணிந்த ஒருவரை அறைந்ததை காட்டியது.