ஜோகூர் பாருவில் பெண் பயணியிடம் ‘சேட்டை’ — Grab ஓட்டுநருக்கு போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் பாரு, பிப்ரவரி-3-வைரலான வீடியோவில் பெண் பயணியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் grab ஓட்டுநருக்கு ஜோகூர் போலீஸார் வலை வீசியுள்ளனர்.
அந்த வீடியோவில், ஓட்டுநர் பின்புறம் கையை நீட்டி பெண்ணைத் தொட முயற்சிக்கிறார்; அசௌகரியத்திற்கு உள்ளான பெண்ணோ ஆடவரின் கையத் தட்டி விடுகிறார்.
தவிர, அந்நபர் சீன மொழியில் வயது மற்றும் ‘எவ்வளவு செலவாகும்’ போன்ற ஒழுங்கற்ற கேள்விகளையும் கேட்கிறார்.
இந்த வீடியோ வைரலாகி சமூக ஊடகங்களில் பெரும் கண்டனத்தைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் அச்சம்பவம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ புகார் கிடைக்கப் பெறவில்லை; என்றாலும் விசாரணை நடந்து வருவதாக ஜோகூர் பாரு செலாத்தான் போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
இவ்வேளையில், அந்த ஓட்டுநரின் செயலுக்காக Grab Malaysia மன்னிப்புக் கேட்டுள்ளது.
“இது நடந்திருக்கக் கூடாது’” என வலியுறுத்திய அந்நிறுவனம், பாதிக்கப்பட்ட பயணியுடன் தொடர்பு கொண்டு ஆதரவு வழங்குவதாகவும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் Grab Malaysia உறுதியளித்தது.



