ஜோகூர் பாரு, டிசம்பர்-7, ஜோகூர் பாருவில் உள்ள பேரங்காடியொன்றின் கழிவறையில், பிறந்து கொஞ்ச நேரமே ஆனதாக நம்பப்படும் ஆண் சிசுவொன்று, இரத்தம் தோய்ந்த உடலோடு தொப்புள் கொடியுடன் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை மாலை 4.50 மணியளவில் கழிவறையைச் சுத்தம் செய்த போது துப்புரவுப் பணியாளர் குழந்தையைக் கண்டதாக, வட ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் பல்வீர் சிங் மஹிந்தர் சிங் (Balveer Singh Mahindar Singh) கூறினார்.
இதையடுத்து உடனடி விசாரணையில் இறங்கிய போலீஸ், அன்றைய இரவே தம்போய் சுற்று வட்டாரத்தில் 19 வயது உள்ளூர் பெண்ணைக் கைதுச் செய்தது.
அப்பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அவரின் காதலன் என நம்பப்படும் உள்ளூர் ஆடவரை போலீஸ் தற்போது தேடி வருகிறது.
குழந்தைப் பிறப்பை மறைக்கும் நோக்கில் பச்சிளங் குழந்தையை வீசியதாக குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.
இவ்வேளையில், சுல்தானா அமீனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தையின் உடல் சீராக இருப்பதாக பல்வீர் சிங் தெரிவித்தார்.