ஜோகூர் பாரு மேம்பாலத்தில் ஆண் சடலம் கண்டுபிடிப்பு; அதிர்ச்சியில் பாதசாரிகள்

ஜோகூர் பாரு, ஜனவரி 5 – ஜோகூர் பாரு பாசிர் கூடாங் நெடுஞ்சாலையோரம், Taman Damansara Aliff பகுதியிலிருக்கும் பாதசாரிகள் பயணிக்கும் மேம்பாலத்தில், இன்று காலை ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது..
இச்சம்பவத்தால் அவ்வழியாக பயணிக்கும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆரம்ப விசாரணையில், குற்றச்செயல் அல்லது வன்முறை நடந்ததற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை என்பதால், இந்த சம்பவம் திடீர் மரணம் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட காவல் துறை தலைவர், Assistant Commissioner Raub Selamat தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த நபரின் பெயர் ஜீவன் என்றும் அவருக்கு 43 வயது எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், மேல் மருத்துவ பரிசோதனை மற்றும் சட்ட நடைமுறைகளுக்காக, அவரது உடல் சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகள் முகநூல் சமூக குழுவில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பலரும் தங்களின் அதிர்ச்சி மற்றும் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் சிலர் இந்த நிகழ்வு தங்களை மிகவும் உலுக்கியுள்ளது என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் தனிப்பட்ட பிரச்சினைகளால் மன அழுத்தம் அடைவோர், தனியாக சுமந்து கொள்ளாமல், உரிய உதவியை நாட வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



