
ஜார்ஜ் டவுன், செப்டம்பர் 25 –
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜார்ஜ் டவுன் ஜாலான் பர்மா சாலை ஒரு பகுதி இடிந்து விழுந்ததையடுத்து அது பழுது பார்க்கப்பட்டு, இன்று காலை முதல் ஜாலான் பர்மா சாலை முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
சாலை பழுது பணிகள் இன்று அதிகாலை 4 மணிக்குள் நிறைவுசெய்யப்பட்டதால், இப்போது சாலையை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தலாமென்று பினாங்கு தீவு மேயர் ஏ. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சாலை இடிந்து விழ காரணம் முதிர்ச்சி அடைந்த கட்டமைப்பு அல்ல மாறாக குழாய் இணைப்பில் ஏற்பட்ட திடீர் இடம் மாறுதல்தான் காரணமென்று IWK விளக்கமளித்தது.
மேலும் 525 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட கழிவுநீர் குழாய், சம்பவம் நடந்த இடத்திலிருந்து மேலே உள்ள பகுதியில் சேதமடைந்ததே இதற்குக் காரணம் எனவும் உறுதிசெய்யப்பட்டது.
சேதமடைந்த கழிவுநீர் குழாய் முழுவதுமாக மாற்றப்பட்டதுடன், புதிய ‘மான்ஹோல்’ மூடி இன்று அதிகாலையில் பொருத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.