
சிரம்பான், பிப் 18 – ரமடான் ( Ramadan ) சந்தையிலுள்ள கடைகளில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை செய்வது மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு எதிராக ஊராட்சி மன்ற அமலாக்கப் பிரிவினர் கடுமையான நடவடிக்கையை எடுப்பார்கள் என நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் (Arul Kumar) தெரிவித்திருக்கிறார்.
மேலும் ரமடான் சந்தையில் வியாபாரம் செய்வதற்கு வழங்கப்பட்ட இடத்தை வெளிநாட்டினருக்கு வாடகைக்கு விட்ட மற்றும் அவர்களை வேலைக்கு வைத்திருக்கும் உள்நாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்பதோடு அவர்களது பெயரும் கருப்பு பட்டியலில் இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு வியாபாரிகள் கூடுதல் வருமானத்தை ஈட்டுவதற்காகவே ரமடான் சந்தை இடம் வழங்கப்படுகிறது.
எனவே இம்முறை வெளிநாட்டு தரப்பினர் ரமடான் சந்தையில் ஊடுருவாமல் இருப்பதை உறுதிப்படுத்துவற்கு நாங்கள் கடுமையான நடவடிக்கையை எடுப்போம் என அருள் குமார் கூறினார்.
ரமடான் சந்தையை வெளிநாட்டினருக்கு வாடகை விடும் ‘Ali Baba’ முயற்சியில் உள்நாட்டு வியாபாரிகள் ஈடுபட முயன்றால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்தவொரு pasar malam அல்லது ரமடான் சந்தையில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு லைசென்ஸ் வழங்கப்படவில்லை என்பதை சமூகம் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.