
கோலாலம்பூர், ஜூலை-9 – 2025 வரவு செலவு அறிக்கையின் கீழ் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்காக 421 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டதானது, மக்களுக்கான நிலையான ஆதரவையும் நிதிச்சுமை சமநிலையாக்கத்தையும் பிரதிபலிக்கிறது.
மக்களின் நலனைப் பேணுவதிலும் நிதிச்சுமை ஒருங்கிணைப்பை செயல்படுத்துவதிலும் சம அளவு முக்கியத்துவம் கொடுப்பது பெரும் சவாலான விஷயமாகும்; என்றாலும், கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட 393.8 பில்லியனை விட இவ்வாண்டு 27.2 பில்லியன் ரிங்கிட் அதிகமாக ஒதுக்கி அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது.
முக்கியமாக B40, M40 குடும்பங்களுக்கான STR மற்றும் SARA உதவித் திட்டங்களுக்கு 13 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது; SARA உதவியும் 1,200 ரிங்கிட்டிலிருந்து 2,100 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டது; உதவிப் பெறுநர்களின் எண்ணிக்கையும் 700,000 பேரிலிருந்து 5.4 மில்லியனாக விரிவாக்கம் கண்டுள்ளது.
MyKad அட்டை மூலம் விரைவாக இவ்வுதவிகள் கிடைப்பதால் பயனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மக்களின் நல்வாழ்வுக்காக பிற நேரடி நிதியுதவிகளுக்கு குறிப்பாக சமூக நலத் துறை வாயிலான ரொக்க உதவிக்கு 2.9 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.
அதில் மூத்த குடிமக்களுக்கான உதவி 600 ரிங்கிட்டுக்கும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான உதவி 250 ரிங்கிட்டுக்கும் உயர்த்தப்பட்டது.
போக்குவரத்து சலுகைகளைப் பார்த்தால், கிள்ளான் பள்ளத்தாக்கில் பேருந்து மற்றும் இரயில் சேவைகளைப் பயன்படுத்த 180,000 பயணிகள் பயனடையும் வகையில், My50 மற்றும் Pas Mutiara பயண அட்டைத் திட்டங்களுக்கு 226 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு வெறும் 50 சென் கட்டணத்தில் ஒருவழி வேன் சேவை; உயர்கல்வி மாணவர்களுக்கு BAS.MY இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இது தவிர, 500,000 ரிங்கிட் வரையிலான வீடுகளுக்கு 7,000 ரிங்கிட் தனிநபர் வருமான வரி விலக்கும், 500,001 ரிங்கிட்டிலிருந்து 750,000 ரிங்கிட் வீடுகளுக்கு 5,000 ரிங்கிட் வருமான வரி விலக்கும் அளிக்கப்பட்டது.
கல்வி அமைச்சுக்கு 64.1 பில்லியன் என பெரும் தொகை ஒதுக்கப்பட்டு, பழையப் பள்ளிகளின் தரமுயர்த்தலுக்கு 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.
உயர் கல்விக்கு 18 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது; அதில் STEM மாணவர்களுக்கு PTPTN வாயிலாக கல்விக் கடனுதவி வழங்க 500 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மொத்த உற்பத்தியில் நிதிச் சுமையை 3.8% ஆக குறைக்க 2025 பட்ஜெட் இலக்குக் கொண்டுள்ளது.