டைனோசர் ‘நெடுஞ்சாலை’; பிரிட்டன் குவாரியில் 166 மில்லியன் ஆண்டுகள் பழைமை வாய்ந்த நூற்றுக்கணக்கான டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிப்பு
லண்டன், ஜனவரி-3, இங்கிலாந்தின் தெற்கே Oxfordshire எனுமிடத்தில் உள்ள ஒரு குவாரியில், ஜூரசிக் காலத்து டைனோசர்களின் நூற்றுக்கணக்கான கால்தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது, வேட்டையாடும் மெகலோசொரஸ் (Megalosaurus) போன்ற ராட்சத டைனோசர்கள் ஒரு நெடுஞ்சாலை போன்ற பெரியப் பாதையில் நகர்ந்திருப்பதைக் காட்டுகிறது.
டிவார்ஸ் பண்ணை குவாரியில் தோண்டியதில் அத்தகைய 5 விரிவான பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றில் ஒன்று 150 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டது என Oxford மற்றும் Birmingham பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
4 தடங்கள் பிரமாண்டமான, நீண்ட கழுத்து கொண்ட, சௌரோபாட்கள் (Sauropods) எனப்படும் தாவர வகை டைனோசர்களால் உருவாக்கப்பட்டவை.
ஐந்தாவது பாதையானது, மாமிச உண்ணியான திரோபாட் Megalosaurus டைனோசரால் உருவாக்கப்பட்டது; இது நகங்களுடன் தனித்துவமான 3 கால் விரல்களைக் கொண்டதாகும்.
சுமார் 166 மில்லியன் ஆண்டுகள் பழமையான மாமிச உண்ணி மற்றும் தாவர வகை டைனோசர்களின் அந்த கால் தடங்கள், ஒரு கட்டத்தில் ஒன்றை ஒன்று கடக்கின்றன.
இதன் மூலம், இரண்டு வகையான டைனோசர்களும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பது பற்றிய கேள்விகளை எழுப்புவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
1824 ஆம் ஆண்டில் விஞ்ஞான ரீதியாக பெயரிடப்பட்ட மற்றும் விவரிக்கப்பட்ட முதல் டைனோசர் இந்த Megalosaurus ஆகும்.
கடந்த 200 ஆண்டுகால டைனோசர் அறிவியல் மற்றும் அதன் மீதான பொது மக்களின் ஆர்வத்தைத் தூண்டிய பெருமையும் அதனையே சேரும்.