
புது டெல்லி, அக்டோபர்-12,
இந்தியாவில், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாக்கி (Amir Khan Muttaqi) நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு உடனடியாக பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சு, அந்நிகழ்வை தாங்கள் ஏற்பாடு செய்யவில்லை என்றும், எனவே எந்த வகையிலும் இந்திய அரசுக்கு அதில் பங்கு இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.
அச்செய்தியாளர் சந்திப்புக்கான அழைப்புகள் மும்பையில் உள்ள ஆப்கான் தூதரகம் வழியாக மட்டுமே வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் நுழைவதிலிருந்து சில பெண் பத்திரிகையாளர்கள் தடுக்கப்பட்டதாகவும், இது பெண்கள் மீதான தலிபான் அமைப்பின் தடைச் செயல்களின் நீட்சியாகக் கருதப்படுவதாகவும் முன்னதாக கண்டனங்கள் எழுந்தன.
எதிர்க்கட்சித் தலைவர்களும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
“பெண் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போது, அங்கிருந்த ஆண் பத்திரிகையாளர்களே வெளியேறி தங்களின் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டாமா?” என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான உறவு நெருங்கி வரும் நிலையில், இது போன்ற பாகுபாடு சம்பவங்கள் அதுவும் இந்திய மண்ணில் நடக்கும் போது கேள்விகளை எழுப்புகின்றன.