
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – சமூக ஊடகங்களில் வைரலான ஜாலூர் ஜெமிலாங்கை தலைகீழாக ஏற்றிய சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் மொத்தம் 38 புகார்கள் காவல்துறைக்கு வந்துள்ளதாக காவல் துறைத் தலைவர் (IGP) டத்தோஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இதில், 17 புகார்கள் பினாங்கில் இருந்து வந்துள்ளன என்றும் மீதமுள்ள 21 புகார்கள் பிற மாநிலங்களிலிருந்து வந்துள்ளன.
மேலும் இந்தச் சம்பவத்தினை சமூக ஊடகத்தில் பதிவேற்றிய நபர், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
சமூக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணும் நோக்கில் வெளிப்படையான, நியாயமான வகையில் போலிஸ் விசாரணை நடத்தும் என அவர் உறுதியளித்தார்.
இந்நிலையில், அம்னோ இளைஞர் அணி தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அக்மல் சாலே, பினாங்கு அம்னோ இளைஞர் அணியுடன் இணைந்து, கெப்பாளா பாத்தாஸில் இச்சம்பவம் தொடர்பாக பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாக கூறியுள்ளார்.
68வது தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக இணையவாசிகள் சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.