
குவாந்தான், நவம்பர்-6 – பஹாங், குவாந்தானைச் சேர்ந்த காய்கறி விற்பனையாளரான 68 வயது மூதாட்டி, காப்புறுதி அதிகாரி மற்றும் போலீஸ்காரர் என ஆள்மாறாட்டம் செய்த கும்பலிடம் 274,000 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.
தனது பெயரில் காப்புறுதிக் கோரிக்கை இருப்பதாகக் கூறி செப்டம்பர் 28-ஆம் தேதி அவரின் கைப்பேசிக்கு அழைப்பு வந்துள்ளது.
பின்னர் போலீஸ்காரர் எனக் கூறிக் கொண்டவருக்கு இணைப்பு மாற்றப்பட, அவரோ, அம்மூதாட்டி சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி பயமுறுத்தியுள்ளார்.
‘விசாரணைக்காக’ வங்கிக் கணக்கு விவரங்களும் தேவை என மூதாட்டியிடம் தெரிவிக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் அவருக்கு கைது ஆணைப் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படவே, மூதாட்டி பீதியடைந்தார்.
கைது ஆணையை நிறுத்தி வைக்க வேண்டுமென்றால், Tabung Haji மற்றும் ASB சேமிப்புப் பணத்தை தனது வங்கிக் கணக்குக்கு மாற்ற வேண்டுமென்றும் அவர் பணிக்கப்பட்டார்.
கடைசியாக அக்டோபர் ஒன்றாம் தேதி சந்தேக நபரிடமிருந்து அழைப்பைப் பெற்ற மூதாட்டி, வங்கி அட்டையை மாற்றி, புதியக் கைப்பேசி எண்ணைப் பதிவுச் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டதோடு, 237,000 ரிங்கிட்டை 8,000 ரிங்கிட் சேமிப்புப் பணமுள்ள மற்றொரு வங்கிக் கணக்குக்கு மாற்ற வற்புறுத்தப்பட்டார்.
அது போதாதென்று, ஜாமீன் கட்டணம் என்ற பெயரில் மூன்றாம் தரப்புக்கு தனியாக 29,000 ரிங்கிட்டையும் மாற்ற அவர் கட்டாயப்படுத்தப்பட்டார்.
சந்தேகம் வந்து வங்கியில் பரிசோதித்த போது, அக்டோபர் 2 முதல் 10 வரையிலான காலக்கட்டத்தில் 14 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 32 தடவையாக பணம் மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்தது.
மொத்தப் பணமும் பறிபோன சோகத்தில் மூதாட்டி போலீசில் புகார் செய்துள்ளார்.