
கோலாலம்பூர், ஆகஸ்ட்-7- தலைமைத்துவ தொடர்ச்சி இல்லாததால் மித்ரா சிறப்பாக செயல்படத் தவறிவிட்டது என்ற பொறுப்பற்ற கூற்றுக்களை மலேசிய இந்திய உருமாற்ற பிரிவான மித்ராவின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ R. ரமணன் சாடியுள்ளார்.
மித்ராவின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டன என்பதைப் புரிந்து கொள்ளாமல் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் கூறக்கூடாது என அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டு மித்ரா சிறப்புக் பணிக்குழுவுக்கு தாம் தலைவராக இருந்தபோது அதற்காக ஒதுக்கப்பட்ட 100 மிலியன் ரிங்கிட் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் மற்றும் ஆக்கப்பூர்வமாகவும் முழுமையாக பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
மித்ரா உதவித் தொகையை பெற்ற அனைவரின் பெயர்களும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு திட்டங்களின் விவரங்களும் கிடைக்கப்பெற்றதாக தொழில்முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமைச்சருமான ரமணன் குறிப்பிட்டார்.
எனவே மித்ரா தோல்வி கண்டுவிட்டது என எந்தவொரு நபரும் எப்படிக் கூறமுடியும் என கோலாலம்பூரில் SME Corp தலைமையகத்தில் இன்று ஐபேப் ( I -BAP ) மானிய கிராண்ட் வழங்கும் நிகழ்சியில் கலந்துகொண்டு ஒப்புதல் கடிதங்களை வழங்கியபோது ரமணன் இதனை தெரிவித்தார்.
மித்ரா மற்றும் அதன் முன்னோடியான இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவான (Sedic) ஆகியவற்றில் அடிக்கடி ஏற்பட்ட தலைமைத்துவ மாற்றங்களால் இந்திய சமூகத்திற்கு உதவுவதற்கான நீண்டகால முயற்சிகளை சீர்குலைந்ததாக தற்போதைய மித்ரா தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பி. பிரபாகரன் மக்களவையில் கருத்து தெரிவித்திருந்தார்.
மித்ரா பற்றி சிலர் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட்டு அதை நாட்டின் தலைமைத்துவத்துடன் தொடர்புப்படுத்தியது தொடர்பில் தாம் ஏமாற்றம் மற்றும் கோபம் அடைந்துள்ளதாக ரமணன் கூறினார்.
உங்களது தோல்வியை பிரதமர் மீது சுமத்தக்கூடாது. அரசியல்வாதிகள் பேசுவதற்கு முன் நூறு முறை சிந்திக்க வேண்டும் என ரமணன் நினைவுறுத்தினார்.