
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-12 – தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங்கை சரியாக பறக்க விடுவது எப்படி என ஊருக்கு உபதேசம் செய்து வரும் அம்னோ இளைஞர் பிரிவு, தற்போது அதே விஷயத்தில் சறுக்கியுள்ளது.
பினாங்கில் கடை உரிமையாளரான சீன முதியவர் தலைக்கீழாக தேசியக் கொடியைப் பறக்க விட்டார் என்பதை ஊர் முழுக்க பரப்பி, பாடமெடுக்கப் புறப்பட்டது தான் இந்த அம்னோ இளைஞர் பிரிவும் அதன் தலைவர் Dr அக்மால் சாலேவும்.
இந்த நிலையில், தேசியக் கொடி விஷயத்தில் திரங்கானு அம்னோ இளைஞர் பிரிவு அதே போன்ற தவற்றை செய்திருப்பது அக்மாலையும் அப்பிரிவினரையும் ‘அம்புத் திருப்பித் தாக்கியது’ போன்ற சூழ்நிலைக்குத் தள்ளியுள்ளது.
சபாவில் பகடிவதையால் மரணமடைந்ததாகக் கூறப்படும் மாணவி சாரா கைரினா மகாதீர் (Zara Qairina Mahathir) மரணத்திற்கு நீதி கேட்டும், பினாங்கில் ஜாலூர் கெமிலாங் தலைக்கீழாக பறக்க விடப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், திரங்கானு அம்னோ இளைஞர் பிரிவு முன்னதாக போஸ்டர் வெளியிட்டிருந்தது.
அதில் இடம்பெற்றுள்ள மலேசியக் கொடியில் 14 கோடுகளுக்கு பதிலாக 12 கோடுகளே இருப்பது இணையவாசிகளின் ‘கழுகுக் கண்களில்’ பட்டு வைரலும் ஆகிவிட்டது.
உடனடியாக அப்பதிவை நீக்கி விட்டு, சரியான 14 கோடுகளுடன் கூடிய மலேசியக் கொடி இடம்பெற்றுள்ள போஸ்டர் மறுபதிவேற்றம் செய்யப்பட்டது.
எனினும், அரசியல்வாதிகள் அக்மாலையும் அம்னோ இளைஞர் பிரிவையும் தற்போது வறுத்தெடுத்து வருகின்றனர்.
இப்போது, கொடியை எப்படி சரியாக இடம் பெறச் செய்வது என்பது தொடர்பில் திரங்கானு அம்னோ இளைஞர் பிரிவுக்கு அக்மால் பாடமெடுப்பாரா என வலைத்தளவாசிகளுடன், DAP, MCA கட்சியினரும் கேலி செய்து வருகின்றனர்.
அதே சமயம், பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தின் போது பாலஸ்தீனக் கொடியை அக்மால் தலைக்கீழாக பிடித்திருக்கும் பழைய புகைப்படமொன்றையும் வைரலாக்கியுள்ளனர்.