
புத்ராஜெயா, மார்ச்-10 – தாய்லாந்தின் யாலா, நராத்திவாட், பட்டாணி ஆகியப் பகுதிகளுக்கான பயணங்களை ஒத்தி வைக்குமாறு மலேசியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அவசியமோ அவசரமோ இல்லாத பட்சத்தில் அம்மூன்று இடங்களுக்கும் இப்போதைக்குச் செல்ல வேண்டாமென, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அறிவுறுத்தியது.
அதே சமயம் தற்போது அங்குள்ள மலேசியர்கள், உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு ஏற்ப, கவனமுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும்.
ஏதாவது அவசரம் ஏற்பட்டால், சொங்லாவில் உள்ள மலேசியப் பேராளரகத்தைத் தொடர்புக் கொள்ளலாம்.
அண்மையில் அங்கு ஏற்பட்ட சில அசம்பாவிதங்களைத் தொடர்ந்து, ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அங்குள்ள நிலவரங்கள் தொடர்ந்து காண்காணிப்படுமென்றும் விஸ்மா புத்ரா கூறியது.
ஆகக் கடைசியாக தென் தாய்லாந்தில் உள்ள ஒரு மாவட்ட அலுவலகத்தில் இரட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இரு தொண்டூழியப் போலீஸ்காரர்கள் கொல்லப்பட்ட வேளை, 8 பேர் காயமடைந்தனர்.