
சிக்கிம், அக்டோபர்-20,
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் (Sikkim) appendix எனப்படும் குடல் வாய் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை முடிந்தும், பத்தாண்டுகளுக்கும் மேலாக தாங்க முடியாத வலியிலிருந்த பெண்ணுக்கு அதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
வலி ஏற்பட்ட இடத்தில், அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஒரு கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்டிருந்தது அம்பலமாகி, ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்துபோனது.
2012-ல் 48 வயது அம்மாது அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
அதற்குப் பிறகும் அடிக்கடி வயிற்றில் வலி ஏற்பட்டதால் பல மருத்துவர்களைச் சென்று கண்டபோதும் தீர்வு ஏற்படவில்லை.
வெறும் வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிட்டு காலத்தைக் கடத்தி வந்த அப்பெண், அக்டோபர் 8-ஆம் தேதி மீண்டும் அதே மருத்துவமனையை நாடியுள்ளார்.
Scan செய்து பார்த்ததில் அதிர்ந்துபோன மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை நடத்தி, வயிற்றிலிருந்த கத்தரிக்கோலை அகற்றினர்.
அப்பெண் குணமடைந்து வரும் நிலையில், மருத்துவர்களின் அலட்சியத்தால் 12 ஆண்டுகளாக அவர் அனுபவித்த நரக வேதனைக்கு மருத்துவமனை நிர்வாகம் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டுமென பாதிக்கப்பட்ட குடும்பமும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.