
சுக்காய், ஆகஸ்ட்-16 – திரங்கானுவின் Semangkok A எண்ணெய் துரப்பண மேடைக்கு அருகே ஒதுங்கிய “பேய் கப்பல்” மீதான பரிசோதனையில், அதில் ஆபத்தான இரசாயனங்களோ அல்லது மனித உடல்களோ எதுவும் கண்டறியப்படவில்லை என, கெமாமான் கடல்சார் மண்டல இயக்குநர் அப்துல் ஹாலிம் ஹம்சா தெரிவித்தார்.
ஆபத்தான இரசயானப் பொருட்கள் தொடர்பான சிறப்புப் படையான HAZMAT-டைச் சேர்ந்த
17 பேரும், கடல்சார் துறை அதிகாரிகளும், 53.7 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்ட அக்கப்பலில் 1 மணி நேரம் சோதனை நடத்தினர்.
உயர் தொழில்நுட்ப வாயு கண்டறிதல் கருவிகளைப் பயன்படுத்தி சோதனையிட்டதில், முதலில் இருந்த துர்நாற்றம் உண்மையில் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மூலப்பொருட்களிலிருந்து வந்தது என அவர்கள் கண்டுபிடித்தனர்.
293 டான் எடையிலான அக்கப்பல், ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஜோகூர் கடற்கரைக்கு அருகே தீப்பற்றிய எண்ணெய் கப்பல் என நம்பப்படுகிறது; அச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தும், நால்வர் காயமடைந்தும் இருந்தனர்.
எனினும், உண்மையிலேயே இது அந்தக் கப்பல் தானா என்பது இன்னமும் விசாரணையில் உள்ளதாக ஹாலிம் சொன்னார்.