Latestமலேசியா

திரிசூலம் மிதிக்கப்பட்ட கோயில் அடையாளம் காணப்பட்டது; மறுபக்கம் தமிம் டாஹ்ரியின் புது விளக்கம்

லங்காவி, மார்ச்-11-நில மீட்புக்கான சமூக ஆர்வலர் என தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் தமிம் டாஹ்ரி (Tamim Dahri) அண்மையில் திரிசூலத்தை காலால் மிதித்த சம்பவம் வைரலாகி, இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து நாடு தழுவிய நிலையில் அவருக்கு எதிராக ஏராளமான போலீஸ் புகார்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அதே சமயம் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் அந்த கோயில் எங்குள்ளது என்ற கேள்வி நீடித்து வந்த நிலையில், அது கெடா, லங்காவியில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் கோயில் என உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

நூற்றாண்டு கால பழைமை வாய்ந்த இக்கோயில் இருக்கும் நிலம், கெடாவில் மிகப் பிரபலமான சீன தொழில் அதிபர் பூன் சியூவுக்குச் சொந்தமானதாகும்.

அங்கு திரிசூலம் வைப்பதற்கும் வழிபாடு நடத்துவதற்கும் நில உரிமையாளரே ஆலய நிர்வாகத்திற்கு அனுமதி தந்துள்ளார்; அப்படியிருக்க தான்தோன்றித் தனமாக தமிம் டாஹ்ரி இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொண்டது ஏன்? அவர் இன்னும் கைதுச் செய்யப்படாமல் இருப்பது ஏன் என, சமூக இயக்கவாதியான உமாகாந்தன் கேள்வி எழுப்பினார்.

உள்ளூர் மக்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்று தாம் பார்வையிட்ட வீடியோவை தனது சமூக ஊடகங்களில் அவர் பதிவேற்றியுள்ளார்.

நிலைமை இவ்வாறிருக்க, தான் காலால் மிதித்தது இந்துக்களின் புனிதச் சின்னங்களில் ஒன்று என தனக்குத் தெரியாது என தமிம் டாஹ்ரி விளக்கம் கூறியுள்ளார்.

அது ஏதோ, கைவிடப்பட்ட துருப்பிடித்த ஓர் இரும்பு கம்பி என்றே தாம் நினைத்திருந்ததாகவும், அதை தூக்கி ஓரமாகப் போட்டதை தவிர வேறெந்த இழிவான நோக்கமும் தமக்கில்லை என்றும் அவர் கூறிக் கொண்டார்.

தமிம் ஆக்ரோஷமாக திரிசூலத்தை மிதித்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வரும் நிலையில், அண்மையில் அல் குர்ஆனை காலால் மிதித்த பல்கலைக்கழக மாணவர் மீது உடனடி நடவடிக்கை எடுத்தது போன்று இவர் மீதும் எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!