
கோலாலம்பூர், அக்-22-பல இனங்களும் பல மதங்களும் இணைந்து வாழும் மலேசியாவில், தீபாவளிச் சந்தையில் இடம்பெற்றுள்ள சொற்கள் தொடர்பான சர்ச்சையில் தண்டனை வழங்குவதைவிட, மக்களுக்குக் கல்வியூட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சிறந்த அணுகுமுறை என கூட்டரசுப் பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்திருக்கிறார். இன்று கோலாலம்பூரில் தீபாவளியை முன்னிட்டு தமிழ் ஊடகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தீபாவளியைக் குறிக்கும் அதிகாரப்பூர்வச் சொல்லான ‘தீபாவளி’ என்பதைப் பயன்படுத்துவதில் கோலாலம்பூர் மாநகர மன்றத்திற்கு (DBKL) எந்தப் பிரச்சினையும் இல்லை. தீபாவளிக் கொண்டாட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள 61 பதாகைகளிலும் பிரதான நுழைவாயிலிலும் ‘தீபாவளி’ என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது. பக்கவாட்டில் நான்கு இடங்களில் ‘Diwali’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதே சர்ச்சைக்குக் காரணம் என அவர் கூறினார்.
ஏற்றுக்கொள்ள முடியாத சொற்கள் இடம்பெற்றிருப்பதற்காக அவற்றை மூடிவிடும் நடைமுறையை ஊக்குவிக்க விரும்பவில்லை என்று ஹன்னா இயோ தெரிவித்தார். இத்தகைய அணுகுமுறை தொடர்ந்தால், எதிர்காலத்தில் பல்வேறு பண்டிகைகள் தொடர்பாகவும் சர்ச்சைகள் உருவாகக்கூடும். மற்றவர்களின் பொருட்களைச் சேதப்படுத்துவதையோ, சொற்களை மூடிவிடுமாறு மிரட்டுவதையோ மலேசியக் கலாசாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விளக்கமளித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக எதிர்ப்புத் தெரிவித்தவர்களுக்குத் தாம் ஏற்கெனவே கடிதம் மூலம் விளக்கமளித்துள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த காலத்தில் காலுறைகள் தொடர்பான சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் எழுந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய பிரச்சினைகளுக்கு முடிவே இல்லாமல் போகக்கூடும் என்றும் எச்சரித்தார்.
இதற்கிடையில், இவ்வாண்டு தீபாவளிச் சந்தையை நடத்துவதற்காக DBKL, 1.8 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையைச் செலவிட்டுள்ளதாக ஹன்னா இயோ தெரிவித்தார். Brickfields பகுதியில் நடைபெறும் தீபாவளிச் சந்தையின் காலம் 21 நாள்களிலிருந்து 30 நாள்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு கடைத் தளத்திற்கான வாடகை 400 ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சிகள் மூலம் அதிகமான மக்களை ஈர்த்து வணிகர்களின் விற்பனையை அதிகரிப்பதுடன், போக்குவரத்து நெரிசலைக் கையாள்வதற்காக அமலாக்க அதிகாரிகளைப் பணியமர்த்தவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
DBKL இவ்வளவு பெரிய அளவில் தீபாவளிச் சந்தையை ஏற்பாடு செய்வது இதுவே முதல் முறை என்பதால், அதன் முயற்சிகளைப் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என ஹன்னா இயோ வலியுறுத்தினார். குறைகளை மட்டும் சுட்டிக்காட்டித் தண்டிக்க முயல்வதைவிட, இந்தியச் சமூகத்திற்குப் பயனளிக்கும் இத்தகைய நல்ல முயற்சிகளில் கவனம் செலுத்தி, தீபாவளியின் சிறப்புகளைக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.



